CRIME
“தந்தைக்கு விழுந்த அரிவாள் வெட்டு.. காப்பாற்றப் போன மகளின் தலையில் கல்லைப் போட்ட கொடூரம்..” உடன்பிறந்த சகோதரர்கள் செய்த வெறிச்செயல்.. பரபரப்பு பின்னணி..!!
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கிட்டூர் தாலுகா ஆவரடி கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குள், சொத்துப் பிரச்சினை காரணமாக முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது 26 வயது மகள் ஆகிய இருவர் தங்களது சொந்த உறவினர்களாலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தார்வாட் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ருத்ரப்பா குந்தரகி (67), தனக்குச் சாதகமாக வந்த நீதிமன்ற உத்தரவின்படி, பூர்வீக நில ஆவணங்களில் தனது பெயரைப் பதிவு செய்வதற்காக மகள் சசிகலாவுடன் (26) கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ருத்ரப்பாவின் சகோதரர்களான சங்கப்பா, பசப்பா மற்றும் பசப்பாவின் மகன் மடிவாளப்பா ஆகியோர், ருத்ரப்பாவை அரிவாளால் கொடூரமாக வெட்டத் தொடங்கியுள்ளனர். தன் தந்தையைக் காப்பாற்ற சசிகலா குறுக்கே வந்தபோது, அவரையும் அக்கும்பல் கொடூரமாக வெட்டியதுடன், தலையில் கல்லைப்போட்டும் கொன்றுள்ளனர்.
அங்கிருந்த பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கண் முன்னே நடந்த இந்த கொடூரக் கொலைகளைச் சிலர் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இந்தத் தாக்குதலில் ருத்ரப்பாவின் கார் டிரைவர் மற்றும் சசிகலாவின் நண்பர் ராகுல் ஆகியோரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி 38 குண்டாஸ் பூர்வீக நிலம் ருத்ரப்பாவிற்குச் சென்றுவிடுமோ என்ற ஆத்திரத்தில் அவரது சகோதரர்கள் இந்த விபரீதத்தை அரங்கேற்றியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பெலகாவி எஸ்பி கே.ராமராஜன் தலைமையிலான போலீசார், தடயங்களைச் சேகரித்து உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
