LATEST NEWS
“அய்யோ நெஞ்சை நடுங்குது..” திறந்திருந்த கேட்… பாய்ந்து வந்த எமன்.. 6 மாதக் குழந்தையை வீதியில் இழுத்துச் சென்ற வளர்ப்பு நாய்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
ஹரியானாவின் சோனிபத் பகுதியில் உள்ள சிக்கா காலனியில், வளர்ப்பு பிட்புல் நாய் ஒன்று 6 மாதக் குழந்தையை மிகக் கொடூரமாகக் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குழந்தை தனது அத்தையுடன் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, வீட்டின் திறந்திருந்த கேட் வழியாக வெளியே ஓடிவந்த பிட்புல் நாய், திடீரென பாய்ந்து குழந்தையைக் கவ்வியது. இதனால் நிலைகுலைந்து அவர்கள் கீழே விழுந்த நிலையிலும், நாய் குழந்தையை விடாமல் வீதியில் இழுத்துச் சென்று முகம், வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்படுத்தியது. குழந்தையைக் காப்பாற்ற முயன்ற அத்தையும் காயமடைந்தார். தற்போது 20-க்கும் மேற்பட்ட தையல்களுடன் அக்குழந்தை ரோஹ்தக் பிஜிஐ மருத்துவமனையில் அதீத ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.
இந்தக் கொடூரச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி, மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அந்த நாய் குழந்தையை ஆக்ரோஷமாகக் தாக்கும் வேளையிலும், அதன் உரிமையாளர் எந்தவித பதற்றமும் இன்றி மிகவும் சாதாரணமாக வந்து நாயை இழுக்க முயன்றது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. நாய் பிரியர்கள் இத்தகைய ஆபத்தான நாய் இனங்களின் தாக்குதல்களுக்குப் பல்வேறு காரணங்களைக் கூறி நியாயப்படுத்தினாலும், குடியிருப்புப் பகுதிகளில் இவ்வளவு ஆபத்தான விலங்குகளை முறையான பாதுகாப்பின்றி வளர்ப்பதும், உரிமையாளர்களின் இத்தகைய அலட்சியப்போக்கும் பொதுமக்களின், குறிப்பாகக் குழந்தைகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
