LATEST NEWS
“எனக்கு அப்புறம் என் மகளை யார் பார்ப்பா..?” கை, கால் இல்லாத 17 வயது சிறுமி… ஒரு வீல்சேர் கூட தராத அரசாங்கம்.. நெஞ்சை உலுக்கும் ஏழைத் தாயின் கண்ணீர் வீடியோ..!!
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பர்ஹி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி திவ்யா குமாரி, இரு கைகள் மற்றும் கால்களைப் பயன்படுத்த முடியாத நிலையில் படுக்கையிலேயே தனது வாழ்க்கையைக் கழித்து வரும் அவல நிலை சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பலரையும் உருக வைத்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு இவரது தந்தை மறைந்த நிலையில், தாய் பேபி தேவி மற்ற வீடுகளில் தினக்கூலி வேலை செய்து தனது மூன்று குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறார். இந்த வறுமையான நிலையிலும், அந்த மாற்றுத்திறனாளி சிறுமிக்கு இதுவரை முறையான அரசாங்க ரேஷன் பொருட்களோ, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியமோ அல்லது அவர் அமர்வதற்கான ஒரு வீல்சேர் போன்ற அத்தியாவசிய வசதிகளோ கூடக் கிடைக்கவில்லை என்பதுதான் பெரும் சோகமாகும்.
“எனக்குப் பின்னால் என் மகளுக்கு யார் ஆதரவாக இருப்பார்?” என்ற ஒற்றைக் கேள்வியோடு தவிக்கும் அந்த ஏழைத் தாயின் நிலையைச் சுட்டிக்காட்டி, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மனிதநேயத்தோடு இந்த அப்பாவிச் சிறுமியின் நிலையை உடனே கவனித்து, அவருக்குக் கிடைக்க வேண்டிய மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், வீல்சேர் மற்றும் அனைத்து அரசு உதவிகளையும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
