LATEST NEWS
19 நாட்களாக மறைக்கப்படும் ரகசியம்.. ஏன் இன்னும் போட்டோ வெளிவரல..? வி.எஸ்.பாபு உடல்நிலை சர்ச்சை.. தவெக அரசு மீது எழும் கேள்விகள்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு கடுமையான சுவாசக் கோளாறு காரணமாக சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 19 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அனுதாப ஓட்டுகளைப் பெறுவதற்காகவே அவரது உண்மையான நிலையை தவெக அரசு மூடி மறைப்பதாக நெட்டிசன்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் நேரில் மருத்துவமனைக்குச் சென்று வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ஆனால், முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிறகும், பாபு சிகிச்சை பெறும் புகைப்படங்களோ அல்லது வீடியோக்களோ தவெக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஒரு மக்கள் பிரதிநிதியின் உடல்நிலை குறித்து மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஏன் புகைப்படங்களை வெளியிட மறுக்கிறார்கள் என கொளத்தூர் தொகுதி வாக்காளர்களும் இணையவாசிகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள சமீபத்திய மருத்துவ அறிக்கையில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், சிறப்பு மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித ஆதாரமுமற்ற வதந்திகளைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகமும் தவெக நிர்வாகிகளும் கேட்டுக்கொண்டுள்ள போதிலும், இணையத்தில் இந்த விவகாரம் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.
