LATEST NEWS
“சீறிப்பாயும் காட்டாற்று வெள்ளம்… தோளில் சுமந்து காப்பாற்றிய காவலர்கள்..” நெஞ்சை நெகிழ வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்..!!
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், பாம்ராகட் பகுதியில் உள்ள பினாகுண்டா என்ற இடத்தில், வெள்ளப்பெருக்கில் சிக்கிய ஒரு பெண்ணை காவல்துறையினரும் கிராம மக்களும் கயிற்றின் உதவியுடன் பத்திரமாக மீட்டுள்ளனர். அதே பகுதியில், மலேரியாவால் பாதிக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை, பொங்கி வழியும் ஆற்றின் நடுவே காவல்துறையினர் தங்கள் தோளில் சுமந்து சென்று பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தொடர்மழை காரணமாக பினாகுண்டா பகுதியில் உள்ள ஆறு கட்டுக்கடங்காமல் கரைபுரண்டு ஓடியதால், அதில் சிக்கிய பெண் ஒருவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக்கண்ட பகுதி மக்கள் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள், கிராம மக்களுடன் இணைந்து உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தபோதிலும், கயிற்றைப் பயன்படுத்தி பாதுகாப்பான பாதையை உருவாக்கி, அப்பெண்ணை கவனமாக மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதே பகுதியில் உள்ள வினோபா பாவே ஆசிரமப் பள்ளியில் படித்து வந்த சிறுமிக்குக் கடுமையான மலேரியா காய்ச்சல் ஏற்பட்டதால், அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் வெள்ளப் பெருக்கால் சாலைகள் துண்டிக்கப்பட்டு நடைபயணமாகக் கூட செல்ல முடியாத ஆபத்தான நிலை இருந்தது. உடனடியாகச் செயல்பட்ட காவலர்கள், அச்சிறுமியைத் தங்கள் தோளில் அமரவைத்து, சீறிப்பாயும் வெள்ள நீரைக் கடந்து பத்திரமாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். வெள்ளப் பெருக்கிற்கு மத்தியிலும் உயிரைப் பணயம் வைத்துச் செயல்பட்ட காவல்துறையினரின் இந்த மனிதநேயப் பணி பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
