CRIME
“கான்ஸ்டபிள் போட்டது பொய் வழக்கு..” நடுரோட்டில் தலித் இளைஞர்களை அடித்த கொடூரம்.. ஓராண்டுக்குப் பின் குண்டூர் கோர்ட் கொடுத்த செம்ம சாட்டையடி தீர்ப்பு..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி பகுதியில், கடந்த 2025 மே மாதம் கான்ஸ்டபிள் கண்ணா சிரஞ்சீவி என்பவர் மூன்று தலித் இளைஞர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாகவும், அவர்கள் தர மறுத்ததால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடுரோட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கிலும் தற்போது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கஞ்சா போதையில் தம்மைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறி கான்ஸ்டபிள் சிரஞ்சீவி அளித்த புகாரின் பேரில், தெனாலி டூ டவுன் போலீசார் ஜான் விக்டர், கரீமுல்லா, ராகேஷ் ஆகிய இளைஞர்களைக் கைது செய்தனர். சட்டபூர்வ விசாரணைக்கு உட்படுத்தாமல், அந்த இளைஞர்களை நடுரோட்டில் அமரவைத்து போலீசார் லத்திகளால் கொடூரமாகத் தாக்கிய வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
https://x.com/ambedkariteIND/status/2105265721093615811?s=20
இந்தத் கொலை முயற்சி வழக்கு குண்டூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த குண்டூர் மாவட்ட நீதிமன்றம், கான்ஸ்டபிள் சிரஞ்சீவி மீது இளைஞர்கள் கொலை முயற்சி தாக்குதல் நடத்தியதற்கான எந்தவொரு வலுவான ஆதாரமும் இல்லை என்று கூறி, போலீசார் அவர்கள் மீது தொடுத்த வழக்கை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், அந்த தலித் மற்றும் சிறுபான்மையின இளைஞர்கள் மீது காவல்துறை திட்டமிட்டுப் பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இந்தத் தீர்ப்பு ஆந்திரப் பிரதேச காவல் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
