CRIME
“என் கண்முன்னே மகனை அடிச்சாங்க… யாரும் காப்பாற்ற வரல…” மெட்ரோவில் இருக்கைக்காக முதியவரை அடித்துக் கொன்ற ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி..! கதறி துடிக்கும் தாய்..!!
டெல்லி மெட்ரோவில் இருக்கை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பவன் சர்மா (48) என்ற நபர் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சய் பிரதாப் சிங் மற்றும் அவரது மகன் சித்தார்த் சிங் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி, பவன் சர்மா தனது தாய் துர்கா சர்மாவுடன் குருகிராமில் உள்ள தனது இளைய சகோதரரைச் சந்தித்துவிட்டு தில்லி யமுனா விகாரில் உள்ள வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. மண்டி ஹவுஸ் மெட்ரோ நிலையத்தில் ரயிலில் ஏறிய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அவரது மகனும், முதியோருக்கான இருக்கையை விட்டுத் தருமாறு கூறியுள்ளனர். அவர்கள் கூறியவுடன் பவனும் அவரது தாயாரும் இருக்கையை விட்டு எழுந்த பிறகும், அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற அதிகாரி பவனின் சட்டைக் காலரைப் பிடித்துக் கன்னத்தில் அறைந்ததாகவும், அவரது மகனும் பவனைத் தாக்கியதாகவும் தாய் துர்கா சர்மா தெரிவித்துள்ளார். தாக்குதலின் போது பவனின் நெஞ்சில் பலமாக குத்து விழுந்ததாக அவரது சகோதரர் தீபக் குற்றம் சாட்டியுள்ளார். தன் மகன் கண்முன்னே தாக்கப்படுவதைக் கண்டு தாய் கத்தியும் யாரும் உதவிக்கு வரவில்லை என்றும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பவன் நிலைகுலைந்து கீழே விழுந்ததாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார். ரயில் உச்சநீதிமன்ற மெட்ரோ நிலையத்தை அடைந்தபோது பவன் சுயநினைவை இழந்தார். உடனே அவர் எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பவன் சர்மா தனது குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக விளங்கியவர். எழுத்தராகப் பணியாற்றி வந்த அவருக்கு மனைவியும், தில்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் 19 வயது மகனும், 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மகளும் உள்ளனர். வரும் நவம்பர் மாதம் அவரது பிறந்தநாளைக் கொண்டாடக் குடும்பத்தினர் தயாராகி வந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாய் துர்கா சர்மா அளித்த புகாரின் அடிப்படையில் அக்டோபர் 9-ஆம் தேதி உச்சநீதிமன்ற மெட்ரோ காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகன் இருவரையும் நீதிமன்றம் 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
