CRIME
அங்கிதா கொலை வழக்கு திடீர் திருப்பம்.. அந்த ஒரு ‘VIP’ யார்..? போராடிய தாய் மயக்கமடைந்ததால் பரபரப்பு..!!
உத்தரகாண்ட் மாநிலம் பௌரி கர்வால் பகுதியைச் சேர்ந்த 19 வயது அங்கிதா பண்டாரி, 2022 செப்டம்பரில் அவர் பணிபுரிந்த ரிசார்ட்டில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா மற்றும் அவனது கூட்டாளிகளான சௌரப் பாஸ்கர், அங்கித் குப்தா ஆகிய மூவருக்கும் 2025 மே 30 அன்று கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. எனினும், இந்த கொலையின் பின்னணியில் ஒரு முக்கிய விஐபிக்கு தொடர்பு இருப்பதாக அங்கிதாவின் பெற்றோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக தற்போது சிபிஐ தனியாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விஐபி குறித்த உண்மைகள் வெளிவர வேண்டும் என்றும், தங்களுக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அங்கிதாவின் தாயார் டெல்லி ராஜ்காட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த டெல்லி போலீசார் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போலீசாரின் இந்த முரட்டுத்தனமான நடவடிக்கையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அங்கிதாவின் தாயார் அங்கேயே மயக்கமடைந்தார்.
மயக்கமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், போலீசார் தங்களது வாகனத்திலேயே சில மணி நேரம் சுற்றி அலைந்ததாகக் கூறப்படும் செய்திகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நீதிக்காகப் போராடும் ஒரு தாயிடம் டெல்லி போலீசார் நடந்து கொண்ட விதம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, இதற்கு டெல்லி காவல்துறை தகுந்த பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
