LATEST NEWS
அய்யயோ இவ்வளவு பாசமா..? “மரணத்திற்குப் பின்னும்” தாய் கல்லறை அருகே தனக்குத்தானே குழி தோண்டிய பாசக்கார மகன்… நெகிழவைக்கும் வைரல் கதை!
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், தனது தாயின் மீது கொண்ட அளவற்ற பாசத்தால், அவர் இறந்த பிறகும் அவரோடே இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நபர் தனது தாயின் கல்லறைக்கு அருகிலேயே தனக்காக சொந்தமாகக் கல்லறை தோண்டியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோபால்கஞ்ச் மாவட்டத்தின் பல்ஹா கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் ஹசன் என்ற நபர் தான் இந்த நெகிழ்ச்சியான செயலைச் செய்துள்ளார்.
மன்சூர் ஹசன் தனது மூன்று சகோதரர்களில் இளையவர் ஆவார். சிறுவயது முதலே தனது தாயான ஷா ஷஹர்பானோ ஹஸ்னியுடன் மிகவும் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருந்தார். கடந்த 1999ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவரது தாய் காலமானபோது, அந்த இழப்பை மன்சூரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை; அது அவரது வாழ்க்கையையே உலுக்கியது. தாயின் மறைவுக்குப் பிறகு, அவரது நினைவாகக் கல்லறையைக் கட்டி, அதைப் பராமரிப்பதையே தனது வாழ்நாள் கடமையாக மாற்றிக்கொண்டார்.
தற்போது பல தசாப்தங்கள் கடந்த நிலையிலும், மன்சூர் தனது பெரும்பாலான நேரத்தைத் தாயின் கல்லறைக்கு அருகிலேயே செலவிட்டு வருகிறார். தான் இறந்த பிறகும் தாயின் அருகிலேயே உறங்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவரே முன்வந்து தனக்கான கல்லறையைத் தோண்டியுள்ளதுடன், தனது இறுதிச் சடங்கிற்கான பச்சை நிறப் போர்வையையும் முன்கூட்டியே வாங்கித் தயார் செய்து வைத்துள்ளார். தாயின் மீதான ஒரு மகனின் இந்த மாறாத அன்பு ஒட்டுமொத்த இணையவாசிகளின் இதயங்களையும் நெகிழச் செய்துள்ளது.
