LATEST NEWS
“டெல்லியில் மீண்டும் ஒரு சோகம்..” ஒரே ஆண்டில் 6-வது முறை.. திடீரென இடிந்து தரைமட்டமான 3 மாடி கட்டிடம்.. 2 பேர் பரிதாப பலி..!!
டெல்லியின் சாவ்ரி பஜார் மெட்ரோ நிலையம் அருகே உள்ள காலி சித்தாராவில், கட்டுமானத்தில் இருந்த மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. தகவல் அறிந்ததும் ஆறு தீயணைப்பு வாகனங்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது டெல்லியில் இந்த ஆண்டில் நிகழும் ஆறாவது பெரிய கட்டிட இடிபாட்டுச் சம்பவமாகும். இதற்கு முன்னர் சாகேத், ரோகிணி, கரோல் பாக், சத்ய நிகேதன் மற்றும் சீமாபுரி ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த 5 சம்பவங்களில் மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சத்யா நிகேதன் பகுதியில் முறையான உரிமம் இன்றி இயங்கி வந்த ஐந்து மாடிக் கட்டிடத்தின் அடித்தளத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்ற போது அது இடிந்து விழுந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். தற்போது சாவ்ரி பஜாரில் நிகழ்ந்த இந்த புதிய விபத்து குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
