CRIME
“மருமகளா..? இல்லை எமனா..?” மாமனார் மற்றும் கணவனைத் திசை திருப்பி.. தங்கையையும் காதலனையும் ஏவி மாமியாருக்கு பக்கா ஸ்கெட்ச் போட்ட மனைவி… குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது பூஜா ஜாதவ் என்பவரின் பேராசை மற்றும் பல அத்துமீறிய உறவுமுறைகளின் பின்னணியில் அரங்கேறிய மாமியார் சுசீலா தேவி கொலை வழக்கு, ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பூஜாவிற்கு, தனது கணவனின் வருமானம் குறைவாக இருந்ததால் அவரோடு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் கணவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினர். விவாகரத்து வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் கல்யாண் என்ற குற்றப் பின்னணி கொண்ட நபருடன் பூஜாவிற்குப் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் லிவ்-இன் முறையில் வாழத் தொடங்கினர். ஆனால், எதிர்பாராதவிதமாக ஒரு சாலை விபத்தில் கல்யாண் உயிரிழந்ததால், பூஜா மீண்டும் தனித்துவிடப்பட்டுத் தனது எதிர்காலம் குறித்துக் கவலைகொள்ள ஆரம்பித்தார்.
கல்யாணின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு ஜீவனாம்சம் கேட்ட பூஜாவை, அவனது தந்தை அஜய் சிங் மற்றும் அண்ணன் சந்தோஷ் ஆகியோர் ஜான்சியில் உள்ள தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சில நாட்களிலேயே ஒரு குழந்தையின் தந்தையான சந்தோஷுடன் பூஜாவிற்கு நெருக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதனால் சந்தோஷின் முதல் மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். இதற்கிடையில், பூஜாவுக்குத் தனது மாமனார் அஜய் சிங்குடனும் தவறான தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. சந்தோஷ் மூலம் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பூஜா, மாமனாருக்குச் சொந்தமான நிலத்தைக் கைப்பற்றி விற்கத் திட்டமிட்டார். கல்யாணின் பங்கான 8 பிகா நிலத்தை விற்க சந்தோஷும் மாமனாரும் ஒப்புக்கொண்டபோதிலும், மாமியார் சுசீலா தேவி அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து கடுமையாக எதிர்த்தார்.
நிலத்தை விற்பதற்குத் தடையாக இருந்த மாமியாரைத் தீர்த்துக்கட்டப் பூஜா ஒரு கொடூரமான சதித்திட்டத்தைத் தீட்டினார். இதற்குத் தனது சகோதரி மற்றும் அவரது காதலனின் உதவியைப் பெற்றார். தனது மகளின் பிறந்தநாள் விழாவைக் குவாலியரில் ஏற்பாடு செய்து, அதற்குத் தனது கணவன் சந்தோஷ் மற்றும் மாமனார் அஜய் சிங் ஆகியோரை வரவழைத்தார். அவர்கள் அனைவரும் குவாலியரில் இருந்த சமயம் பார்த்து, ஜான்சியில் தனியாக இருந்த மாமியார் சுசீலா தேவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யத் தனது சகோதரியையும் அவரது காதலனையும் பூஜா அனுப்பியுள்ளார். கொலைச் செய்தி கேட்டு கணவனும் மாமனாரும் ஜான்சிக்கு விரைந்தனர். பூஜாவின் நடத்தை மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகமடைந்த காவல்துறையினர், பூஜாவின் சகோதரி மற்றும் அவரது காதலனைக் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டனர். விசாரணையில் அவர்கள் சுசீலா தேவியைக் கழுத்தை நெரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இந்த ஒட்டுமொத்தக் கொலைச் சதியின் சூத்திரதாரியான பூஜா ஜாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர்.
