CRIME
ஒரே குடும்பத்தில் 6 பேர் சுட்டுக் கொலை.. 3 ஆண்டுகளாக பல மாநில போலீசுக்கு தண்ணி காட்டிய முக்கிய குற்றவாளி சிக்கியது எப்படி..? பதைபதைக்கும் பின்னணி!
மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டம் லேபா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ராமு சிங் தோமரை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் ஹரியானாவின் குருகிராமில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த 2013-ல் நடந்த ஒரு நிலத்தகராறில் தனது மாமாக்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில், 2023 மே 5 அன்று ஒரு திருமண விழாவிற்காகக் கூடியிருந்த ரஞ்சித் சிங் தோமரின் குடும்பத்தினர் மீது ராமு சிங் மற்றும் அவரது தரப்பினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் என 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்கக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்குப் பிறகு தலைக்கு ரூ.30,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த ராமு சிங், தனது அடையாளத்தை மறைத்து மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் செக்யூரிட்டியாகவும் பகுதி நேர ஊழியராகவும் பதுங்கி வாழ்ந்து வந்துள்ளார்.
தற்போது குருகிராமின் கோபால்பூர் ஜிஐடிசி பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் அவர் வேலை பார்த்து வருவதாகக் கிடைத்த துல்லியமான ரகசியத் தகவலின் அடிப்படையில், குற்றப்பிரிவு டிசிபி அஜித் ராஜயன் தலைமையிலான சிறப்புக் குழுவினர் கர்ஹி-ஹர்சாரு சாலை அருகே கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமு சிங் தோமரை மத்தியப் பிரதேசத்தின் சிஹோனியா காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ராமு சிங்கின் இந்த முக்கியக் கைது மூலம் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகள் மற்றும் இந்தத் கொடூரத் தாக்குதலின் முழு சதித்திட்டம் குறித்த பல முக்கிய ரகசியங்கள் விரைவில் வெளிவரும் என்று காவல்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
