LATEST NEWS
“கொள்ளை அடிக்கத்தான் மழை, காத்துன்னு கதை விட்டீங்களா..?” மின்சாரக் கொள்முதல் விவகாரத்தில் உதயநிதி கடும் தாக்கு..!!
தமிழகத்தில் மின்சாரத் தேவையைச் சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 விலைக்குக் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். ஒரு யூனிட்டுக்கு ரூ.35-க்கு மேல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் என்றும், இது நிர்வாகத் தோல்வி அல்லது முறைகேடு என்றும் திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதளப் பதிவில், திமுக ஆட்சிக்காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று கூறி டென்டரை ரத்து செய்த இந்த சர்கஸ் அரசு, இன்றைக்கு 1 யூனிட் மின்சாரத்தை மிக மிக அதிக விலைக்கு ரூ.35 கொடுத்து வாங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இப்படி கொள்ளை அடிக்கத்தான், ‘காற்று அடிக்கவில்லை – மழை வரவில்லை – பஞ்சாப்ல கூட இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்தது’ என்றெல்லாம் கட்டுக்கதைகளைச் சொல்லி இத்தனை நாட்களாக இந்த ஆட்சியாளர்கள் செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா? இந்த ஊழல் டீல் முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கிறாரா பஞ்ச் டயலாக் சி.எம்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கனவே மின்கட்டணம் என்கிற பெயரில் மக்களிடம் பகல்கொள்ளை அடிக்கும் இந்த அரசு, அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து அதையும் பொதுமக்கள் தலையில் கட்டப் போவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு போய் நிறுத்தியுள்ள இந்தக் கோமாளிக்கூட்டம், இன்னும் எத்தனை தூரம் மக்களை வதைக்கவிருக்கிறது என்றும், மாற்றம் என்று சொல்லி நம்பர் 1 டுபாக்கூராக மாறி நிற்கும் இந்த முதலமைச்சருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
