LATEST NEWS
“எரிச்சோமா? புதைச்சோமா? போய் பாருங்க சடலம் இருந்தா இருக்கும்” கூலித்தொழிலாளி மரணத்தில் விலகாத மர்மம்.. மாத்தி மாத்தி பேசும் காவல்துறை… பரிதவிக்கும் மனைவி..!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காணாமல் போன சுப்பிரமணி என்ற கூலித் தொழிலாளி, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு, அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்காமல் காவல்துறையினரால் அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்குச் சென்ற சுப்பிரமணி மீண்டும் வீடு திரும்பாததால், அவரது மனைவி ஜெயலட்சுமி தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, ஊனத்தூர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் போலீசாரின் விசாரணையில், அடக்கம் செய்யப்பட்ட நபர் சுப்பிரமணியாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுப்பிரமணியின் குடும்பத்தினர் தலைவாசல் காவல் நிலையத்திற்குச் சென்று, சடலத்தை அடக்கம் செய்வதற்கு முன்பு தங்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அங்கிருந்த காவல் ஆய்வாளர் பூர்ணிமா, முதலில் சடலத்தை எரித்ததாகக் கூறிவிட்டு, பின்னர் புதைத்ததாக மாற்றி மாற்றிப் பேசியதாகக் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறித்துக் கேட்டபோது, “அங்கு சென்று பாருங்கள், உடல் இருந்தாலும் இருக்கலாம்” என்று ஆய்வாளர் அலட்சியமாகப் பதிலளித்ததாகவும் உறவினர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
காவல்துறையின் இந்த அலட்சியப் போக்கால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி ஆத்தூர் டிஎஸ்பி (DSP) அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். தங்களது சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், காவல்துறையினர் தரப்பில், உயிரிழந்த நபர் குறித்து ஐந்து நாட்களாக எந்தத் தகவலும் கிடைக்காததால் உரிய அனுமதி பெற்றே உடல் அடக்கம் செய்யப்பட்டதாகவும், புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
