CRIME
“24 மணி நேரத்துல உன் கதையை முடிப்போம்” சொன்னபடியே வாலிபரைத் தூக்கிக் கட்டாயமாக விஷம் கொடுத்துக் கொ** கொடூர கும்பல்… சடலத்தை காவல் நிலைய வாசலில் வைத்து விடிய விடிய போராட்டம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், காதல் விவகாரம் காரணமாக வாலிபர் ஒருவருக்கு 24 மணி நேரத்திற்குள் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து, அதன்படியே அவருக்குக் கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்துக் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசாபர்நகரின் மீராபூர் பகுதியைச் சேர்ந்த மோனு என்ற வாலிபருக்கும், அவரது அண்டை வீட்டைச் சேர்ந்த ஹர்ஷ் என்பவருக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஹர்ஷ் மற்றும் அவரது சகோதரர்கள் மோனுவின் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்கியதோடு, “உன்னை இன்னும் 24 மணி நேரத்திற்குள் கொன்றுவிடுவோம்” என்று வெளிப்படையாகவே மிரட்டிச் சென்றுள்ளனர்.
அவர்கள் எச்சரித்தபடியே, அன்றைய தினம் நள்ளிரவில் மோனுவை வழிமறித்த அந்தக் கும்பல், அவரைப் பலவந்தமாகப் பிடித்துக் கட்டாயப்படுத்தி விஷத்தைக் குடிக்க வைத்துவிட்டுச் தப்பியோடியுள்ளனர். மயக்க நிலையில் இருந்த மோனு, தனது உறவினருக்குத் தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகத் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மீரட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்குச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் செய்தி பரவியதும் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி மீராபூர் காவல் நிலையத்தின் முக்கிய நுழைவாயில் முன்பாக மோனுவின் சடலத்தை வைத்து விடிய விடிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மோனுவிற்கும் எதிர் தரப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே இருந்த காதல் விவகாரம் மற்றும் அதன் காரணமாக நீடித்து வந்த முன்விரோதமே இந்தக் கொலைக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. தற்போது இந்தச் சம்பவத்தில் ஹர்ஷ், துஷார், அக்சய் உட்பட மொத்தம் 7 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியக் குற்றவாளியின் தந்தையைக் காவல் துறையினர் உடனடியாகக் கைது செய்ததை அடுத்துப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
