LATEST NEWS
“அம்மா துர்க்கை இருக்கிறாள்… எனக்கு எதுவும் ஆகாது..” 6 நாளாக தண்ணீர் கூட குடிக்காமல் விரதம்..! தந்தையின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரைப் பணயம் வைத்த மகள்..!!
பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டத்தில் உள்ள திருவேணிபஞ்ச் மேளா மைதானக் கோயிலில், தனது தந்தையின் உடல்நலனுக்காக பெண் ஒருவர் நவராத்திரி திருவிழாவின் போது கடுமையான விரதத்தை மேற்கொண்டுள்ளார். வாசுதேவ் சர்தார் என்ற தனது தந்தைக்கு சில மாதங்களுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டதையடுத்து, அவர் பூரண நலம் பெற வேண்டி அவரது மகளான குட்டி தேவி, துர்க்கை அம்மனிடம் பிரார்த்தனை செய்து இந்த கடும் விரதத்தை ஆரம்பித்துள்ளார்.
கடந்த 6 நாட்களாக தண்ணீர் கூட அருந்தாமல், தனது கைகளில் கலசத்தைத் தாங்கியபடி குட்டி தேவி இந்த கடுமையான விரதத்தை மேற்கொண்டு வருகிறார். இதய நோயாளியான அவர், விரதம் காரணமாக தனது மருந்து மாத்திரைகளையும் நிறுத்தியுள்ளார். இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அங்குள்ள மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்தபோது அவரது இரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு ஆபத்தான நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. இருப்பினும், “அம்மா துர்க்கை இருக்கிறார், எனக்கு எதுவும் ஆகாது” என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அவர் சிகிச்சையை மறுத்துவிட்டார்.
பெண்ணின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து தகவல் அறிந்த எஸ்டிஎம் அபிஷேக் குமார், எஸ்டிபிஓ திலீப் குமார் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் குடும்பத்தினரிடமும், பூசாரி குழுவினரிடமும் நிலைமையை விளக்கிப் பேசினர். அப்பெண்ணின் மத நம்பிக்கைகளுக்கு எந்தவிதமான குந்தகமும் விளைவிக்காமல், அதேசமயம் அவரது உயிரைக் காக்கத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
