LATEST NEWS
ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை.. தேன்கூட்டைக் கலைத்த வாலிபர்… அடுத்த நொடியே நடந்த விபரீதம்… உயிருக்குப் போராடும் கொடூரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது, தேன்கூட்டைக் கலைத்ததால் ஆவேசமடைந்த தேனீக்கள் தாக்கியதில் வாலிபர் ஒருவருக்கு 50-க்கும் மேற்பட்ட இடங்கள் தேனீக்கள் கொட்டியுள்ள கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீரட்டின் சிவில் லைன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சர்க்யூட் ஹவுஸ் வளாகத்தில் கடந்த திங்கட்கிழமை இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. அங்கு வந்திருந்த சில பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக அங்கிருந்த தேன்கூட்டைக் கலைத்து விளையாடியதாகக் கூறப்படுகிறது.
தேன்கூடு கலைக்கப்பட்டதால் ஆவேசமடைந்த நூற்றுக்கணக்கான தேனீக்கள், அங்கிருந்த மக்கள் மீது கூட்டமாகப் பாய்ந்து கொட்டத் தொடங்கின. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்தத் தாக்குதலில் நக்லா பட்டு பகுதியைச் சேர்ந்த அபிநவ் என்ற இளைஞரைத் தேனீக்கள் முற்றுகையிட்டு உடல் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கொட்டியதில், அவர் வலியால் துடித்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். மேலும் அங்கிருந்த சில பள்ளி குழந்தைகளும் தேனீக் கடிக்கு ஆளாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தேனீக்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மயங்கிக் கிடந்த அபிநவ் மீட்கப்பட்டு அருகில் உள்ள சுசீலா ஜஸ்வந்த் ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முக்கிய விஐபிக்கள் வந்து செல்லும் சர்க்யூட் ஹவுஸ் வளாகத்திற்குள் வெளியாட்கள் அனுமதியின்றி நுழைந்து ரீல்ஸ் எடுப்பது, அங்கிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
