CRIME
“அவங்கதான் கடத்திட்டு போனாங்க..?” மனைவியை எரித்து கொன்றுவிட்டு, ICE அதிகாரிகள் மீது பழிபோட்ட கொடூரக் கணவன்..! விசாரணையில் வெளிவந்த பகீர் நாடகம்..!!
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 28 வயது நபர் ஒருவர், தனது மனைவியை அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் முகமை அதிகாரிகள் “கடத்திச் சென்றுவிட்டதாக” ஆரம்பத்தில் நாடகமாடிய நிலையில், தற்போது அவரே மனைவியைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்த ஜாஸ்மின் கில் என்ற அந்தப் பெண், கடந்த செப்டம்பர் 30-ம் தேதி சாக்ரமெண்டோ நகரில் உள்ள தனது இல்லத்தில் கடைசியாகப் பார்க்கப்பட்ட நிலையில், நான்கு நாட்களுக்குப் பிறகு அவரது உறவினரால் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.
ஆரம்பக் விசாரணையின் போது, அவரது கணவரான குரிந்தர் கில், வீட்டின் அருகில் தபால் பெட்டியைச் சோதித்துக் கொண்டிருந்தபோது குடியேற்ற விதிகளை மீறியவர்களைத் தடுத்து நிறுத்தும் ‘ICE’ முகமை அதிகாரிகள் தனது மனைவியை அழைத்துச் சென்றதாகக் கூறினார். இருப்பினும், காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அமைப்பைத் தொடர்புகொண்டபோது, அவர்களின் இல்லத்தில் அத்தகைய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது உறுதியானது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குரிந்தரின் கூற்றுகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதோடு, அவர்களுக்கு இடையே விவாகரத்து மற்றும் குழந்தை காவல்கான சட்டப் போராட்டம் நடந்து வந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே, அக்டோபர் 1-ம் தேதி எல் டொராடோ மாகாணத்தில் எரிக்கப்பட்ட மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு, அவை ஜாஸ்மினுடையதுதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் ஆதாரங்களைத் திரட்டிய காவல்துறையினர், குரிந்தரை கொலை வழக்கில் அக்டோபர் 14-ம் தேதி கைது செய்து சாக்ரமெண்டோ கவுண்டி முதன்மைச் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், குற்றவாளிகள் இதுபோன்ற குற்றங்களை மறைக்க தங்களைப் பலிகடாவாக்க முயல்வதாக ‘ICE’ முகமை கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஜாஸ்மினின் குடும்பத்தினர் அவரது உடலை இந்தியா கொண்டுவரக் கோரி நிதியுதவி திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
