LATEST NEWS
“இனி ஒரு சிபாரிசு கூட செல்லாது…” அரசு ஊழியர்களுக்கு அதிரடி செக்.. தமிழக அரசின் அதிரடி சுற்றறிக்கை..!!
அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தவோ அல்லது அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நேரடியாக அணுகி சிபாரிசு தேடவோ கூடாது என்று தமிழக அரசு அதிரடி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசுப் பணியாளர்கள் தங்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் இதர தனிப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கோ அல்லது மக்கள் பிரதிநிதிகளுக்கோ நேரடியாக மனு அளிக்கக் கூடாது என்று அதில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால், அந்தந்த துறை சார்ந்த தலைமை அதிகாரிகளின் வழியாக மட்டுமே உரிய நிர்வாக விதிகளைப் பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிர்வாகப் பணிகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், அதிகாரப்பூர்வமற்ற வழிமுறைகள் மற்றும் அரசியல் அழுத்தங்களைத் தடுக்கவும் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி, கோரிக்கைகளுக்காகத் தவறான வழிகளில் சிபாரிசு கொண்டுவர முயற்சிக்கும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதன் மூலம், தகுதி மற்றும் விதிகளின் அடிப்படையில் மட்டுமே அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
