LATEST NEWS
“அவர் ஒன்றும் தீவிரவாதி அல்ல..” நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்ட அன்பில் மகேஷ்.. வழக்கறிஞர் வில்சனின் அதிரடி வாதம்..!!
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பாக அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த விசாரணையின் போது, நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்ட அன்பில் மகேஷ் தரப்பிற்காக வழக்கறிஞர்கள் சரவணன் மற்றும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். மறுபுறம், காவல்துறை தரப்பில் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன் ஆஜராகி வலுவான வாதங்களை எடுத்துரைத்தார்.
நீதிமன்றத்தில் வாதாடிய அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர்கள், “அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞர் அலுவலகத்தில் அமர்ந்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்து கைது செய்தது முறையான நடைமுறை அல்ல” என்று குற்றம் சாட்டினர். மேலும், “அன்பில் மகேஷ் ஒன்றும் தீவிரவாதியல்ல, எனவே இந்த கைதை நீதிமன்றம் ஏற்கக் கூடாது; அவரை நீதிமன்றக் காவலில் வைக்கக் கூடாது” என மூத்த வழக்கறிஞர் வில்சன் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். இருப்பினும், இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, இந்த கைதை எதிர்த்த திமுக தரப்பின் கோரிக்கையை ஏற்காமல், அன்பில் மகேஷை நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
