LATEST NEWS
1995 வேலூர் கோட்டை சுரங்கப்பாதை சம்பவத்திற்கு பின்… 31 வருடங்கள் கழித்து தமிழகத்தை உலுக்கிய சம்பவம்… 17 கைதிகள் தப்பியது எப்படி..?
தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறையிலிருந்து ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம், கடந்த 31 ஆண்டுகளில் தமிழகச் சிறைத்துறையின் வரலாற்றிலேயே நடைபெற்ற மிகப்பெரிய தப்பியோட்ட நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. கைதி ஒருவருக்கு நள்ளிரவில் திடீரென வலிப்பு ஏற்பட்டது போல நாடகமாடி, முதலுதவி அளிக்க வந்த சிறைக் காவலர்களைக் கூட்டுச் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிவிட்டு, சிறைச் சாவிகளைப் பிடுங்கி இக்கைதிகள் தப்பியோடியுள்ளனர். தப்பியோடிய கைதிகளின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களைச் சிறைத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு 1995-ஆம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் இதே போன்றதொரு பிரம்மாண்டப் பாதுகாப்பு மீறல் அரங்கேறியுள்ளது. அப்போது வேலூர் கோட்டை சிறையிலிருந்து சுதந்திர தினத்தன்று 43 கைதிகள் ஒன்றிணைந்து, சுமார் 153 அடி நீளத்திற்குச் சுரங்கப்பாதை தோண்டி அதன் வழியே துணிகரமாகத் தப்பியோடினர். அந்தப் பெரும் தேடுதல் வேட்டையின் முடிவில் தப்பியோடிய 43 பேரில் 21 கைதிகள் மட்டுமே போலீசாரால் மீண்டும் பிடிக்கப்பட்டனர் என்பது வரலாற்றுத் தகவலாகும்.
தற்போது தேனி சிறையில் நிகழ்ந்துள்ள இந்தத் தப்பியோட்டம், 1995 வேலூர் சிறை சம்பவத்திற்குப் பிறகு தமிழகத்தில் நிகழ்ந்துள்ள மிக மோசமான சிறை உடைப்பு சம்பவமாகக் கருதப்படுகிறது. தப்பியோடிய 17 கைதிகளையும் பிடிக்கத் தென்மண்டல ஐ.ஜி மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாநில எல்லைகள் மற்றும் முக்கியச் சாலைகளில் தீவிரத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
