LATEST NEWS
“கரூர்லயே போட்ருக்கனும்” விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக புள்ளி.. பிடிக்க 3 தனிப்படைகள் வேலூர் விரைந்ததால் பரபரப்பு..!!
சென்னை புழல் மத்திய சிறை வாசலில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தீவிர விசாரணைக்குப் பிறகு துல்லியமாக அடையாளம் கண்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்களில் ஒருவர், “அன்னைக்கே அவனை கரூர்ல போட்டிருந்தா…” என வன்முறையைத் தூண்டும் விதமாகவும் முதலமைச்சரை ஆபாசமாக ஒருமையில் திட்டியும் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வன்முறைப் பேச்சு தொடர்பாகத் தீவிரமாக விசாரித்த காவல்துறையினர், முதலமைச்சருக்குப் பொதுவெளியில் கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் வேலூர் மாநகராட்சியின் திமுக கவுன்சிலரான சரவணன் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், வன்முறையைத் தூண்டுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் கவுன்சிலர் சரவணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்பொழுது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாகியுள்ள திமுக கவுன்சிலர் சரவணனை அதிரடியாகக் கைது செய்ய சென்னை மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் உடனடியாக அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளியைப் பிடிப்பதற்காக இந்தத் தனிப்படையினர் தற்பொழுது வேலூருக்கு விரைந்துள்ள நிலையில், அவரது இருப்பிடங்களைச் சுற்றி வளைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மிக விரைவில் சரவணன் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என உயர் காவல் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
