CRIME
வெறும் ரூ.700 புடவைக்கு ஆசைப்பட்ட பெண்.. திருமணத்திற்கு 20 நாள் இருக்கும்போது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் அவுட்.. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் ஆஃபர் விபரீதம்..!!
பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் சிறப்புத் தள்ளுபடி விற்பனையின் போது, வெறும் 700 ரூபாய்க்குத் புடவை ஆர்டர் செய்த இளம் பெண் ஒருவரிடமிருந்து சைபர் குற்றவாளிகள் ரூ.1 லட்சத்தை நூதனமாகப் பறித்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுமார் 15 நாட்களுக்கு முன்பு, தனது திருமணத்திற்காக ஆசையாகப் புடவை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அந்த 700 ரூபாய் புடவை ஆர்டர் தனது வாழ்க்கையையே புரட்டிப் போடப்போகும் ஒரு பெரும் சுமையாக மாறும் என்று அந்தப் பெண் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
புடவை கைக்கு வந்த பிறகு, அதில் திருப்தி இல்லாததால் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 7 நாட்கள் ரிட்டர்ன் பாலிசி விதியின்படி, அதனைத் திருப்பி அனுப்பிவிட்டுப் பணத்தைத் திரும்பப் பெற முயன்றுள்ளார். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட சைபர் மோசடி கும்பல், வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் போலப் பேசி அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டுள்ளது. பணத்தைத் திரும்பத் தருகிறோம் என்ற போலி வாக்குறுதியை நம்பி, அந்தப் பெண் தங்களுக்குத் தெரியாமலேயே மோசடி கும்பலின் வழிகாட்டுதலின்படி 5 தவணைகளாக மொத்தம் ரூ.99,000-க்கும் அதிகமான பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு டிஜிட்டல் முறையில் மாற்றியுள்ளார்.
இதில் மிகவும் நெஞ்சை உலுக்கும் விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணிற்கு இன்னும் 20 நாட்களில் திருமணம் நடைபெறவிருந்தது. திருமணச் செலவுகளுக்காகவும், ஜவுளி மற்றும் இதர தேவைகளுக்காகவும் அவரது குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டுச் சிறுகச் சிறுகச் சேர்த்து அந்த வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து வைத்திருந்த பணத்தையே சைபர் கொள்ளையர்கள் சில நிமிடங்களில் ஏமாற்றிப் பறித்துச் சென்றுள்ளனர். திருமண வீடு தற்போது பணத்தை இழந்து தவித்து வரும் இந்தச் சம்பவம், ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் ரீஃபண்ட் மற்றும் ரிட்டர்ன் விஷயங்களில் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
