LATEST NEWS
கரூர் சம்பவத்தில் விஜய் ஓடியதைப் போலத்தான்… ஜோதிடரின் பரிகாரத்தைச் செய்ய தான் சிறை ஆய்வா..? 17 கைதிகள் தப்பிய விவகாரத்தில் திமுக பரந்தாமன் தாக்கு..!!
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், தேனி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் விஜய்யை திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
முதல்வர் விஜய் முன்னதாக ஆய்வு செய்த அடுத்த மாதமே புழல் சிறையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பியதை பரந்தாமன் சுட்டிக்காட்டினார். மேலும், கடந்த 1995ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 55 எல்டிடிஇ தீவிரவாதிகள் தப்பியதற்குப் பிறகு, திமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும், தற்போது தவெக ஆட்சியில் மீண்டும் இப்படி ஒரு பெரிய விபரீதம் நடந்துள்ளதாகவும் அவர் விவரித்தார்.
தேனி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு கைதிகள் தப்பியோடியுள்ளதால், இந்த ஆட்சியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என அவர் சாடினார். அதோடு நில்லாமல், “முதலமைச்சராகச் சிறைக்குச் சென்று ஆய்வு செய்தீர்களா? இல்லையென்றால், ஜோதிடரின் பரிகாரத்தைச் செய்வதற்காகச் சிறைச்சாலைக்குள் சென்று வந்தீர்களா?” என முதல்வர் விஜயை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
விஜய் சினிமாவில் மட்டுமே ஹீரோவாக வலம் வருவதாகவும், நடைமுறையில் ஜீரோவாக இருப்பதாகவும் சாடிய அவர், இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஏன் மௌனம் காக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், கரூர் சம்பவத்தின்போது விஜய் ஓடியதைப் போலத்தான் தற்போது சிறைக் கைதிகளும் தப்பியோடிக் கொண்டிருக்கிறார்கள் என மிகக் கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்துப் பேட்டியை நிறைவு செய்தார்.
