CRIME
“என் அப்பாதான் கொன்னுட்டாரு..” படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் தாய்… சமையலறையில் கத்தியைக் கழுவிய கணவன்..! மகனின் புகாரால் அம்பலமான கொடூரம்..!!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பக்கோவால் சாலையில் உள்ள விகாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில், ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வந்த பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 49 வயதான கமல்தீப் கவுர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து தாயகம் திரும்பி சில நாட்களே ஆன நிலையில், அவரது படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த கொடூரச் சம்பவத்தில், உயிரிழந்த பெண்ணின் கணவரான ரவிந்தர் சிங் மீது அவரது மகன் ககன்தீப் சிங் கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளார். தன் தந்தை தன் தாயை சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக மகன் தெரிவித்தார். சம்பவத்தன்று மகன் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, தந்தை வீட்டின் கதவைத் திறந்ததாகவும், உள்ளே தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும் கூறினார். மேலும், கொலைக்குப் பிறகு சமையலறையில் கத்தியைக் கழுவி வைத்திருந்ததை வைத்து, இது திட்டமிடப்பட்ட கொலை என மகன் குற்றம்சாட்டினார்.
வீட்டின் பக்கத்து வசிப்பவர் நரிந்தர் கவுர் கூறுகையில், குருவாராவில் இருந்து திரும்பியபோது கதவு திறந்திருக்க, கமல்தீப்பைக் கூப்பிட்டதாகவும், உடனே உள்ளிருந்து மகனின் அலறல் சத்தம் கேட்டதாகவும் தெரிவித்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்தைக் கண்டு அக்கம் பக்கத்தினரைத் திரட்டியதாகக் கூறினார். இச்சம்பவம் குறித்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட கணவர் ரவிந்தர் சிங்கை கைது செய்தனர். தற்போது கணவன்-மனைவிக்கிடையேயான பழைய தகராறு மற்றும் இந்த கொலையின் உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
