LATEST NEWS
“ரூ.5 கோடி கொடுத்தாலும் தரமாட்டேன்…” மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்… உடனே லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்த திமுக.. அதிரும் தமிழக அரசியல்..!!
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் பேசிய பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசுப் பதவிக்காகத் தனக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க ஒருவர் முயன்றதாகக் கூறிய தகவல் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியைத் தனக்கு வழங்கினால் ரூ.5 கோடி தருவதாக ஒருவர் தன்னிடம் பேசியதாக தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி கூறியதாகவும், ஆனால் ரூ.500 கோடி கொடுத்தாலும் காசு வாங்கிக் கொண்டு தகுதியில்லாத நபருக்குப் பதவி வழங்க மாட்டோம் என்று கூறி, தகுதியான நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமிக்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் அப்பதவியை வழங்கியதாகவும் அவர் பேசியிருந்தார்.
லஞ்சம் கொடுக்க முயன்றவர் மீது உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காமல், அதனைப் பொதுமேடையில் மட்டும் பேசியது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. லஞ்சம் கொடுப்பதும், கொடுக்க முயல்வதும் சட்டப்படி குற்றம் எனச் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சியினரும் திமுகவினரும், லஞ்சப் பேரத்தைப் பற்றிப் பேசிய நபரைப் பற்றிய தகவலை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தராமல் மறைப்பதன் காரணம் என்ன என்றும், லஞ்சப் பேரத்தில் ஈடுபட்ட அந்த நபரை அமைச்சர் ராஜ்மோகனும் லயோலா மணியும் ஏன் பாதுகாக்கிறார்கள் என்றும் சரமாரியாகக் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜ்மோகன் மேடையில் பேசிய பேச்சு மற்றும் வெளிப்படுத்திய ஆதாரங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திமுக சார்பில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சப் பேரம் பேசப்பட்டதாக அமைச்சரே பகிரங்கமாக ஒப்புக்கொண்டதையடுத்து திமுக அளித்துள்ள இந்த புகார் மனு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
