LATEST NEWS
“கைது செய்த கையோடு ரிலீஸ்” கோழிக்கோடு நீதிமன்றத்தில் தலைகீழாக மாறிய BLM பிரேம்குமார் வழக்கு… BLM நிர்வாகம் வெளியிட்ட திடுக் அறிக்கை..!!
சுமார் ரூ.5,000 கோடி நிதி முறைகேடு புகாரில் சிக்கிய பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவு சங்கத்தின் நிறுவனர் ஆர். பிரேம்குமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவால் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடம் அதிக வட்டி தருவதாகக் கூறி முதலீடுகளைப் பெற்று ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கடந்த அக்டோபர் 29 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கேரள குற்றப்பிரிவு போலீசார் அவரைத் தூக்கினர்.
கைது செய்யப்பட்ட பிரேம்குமார் அக்டோபர் 30 அன்று கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்படுவதற்கு முன்பு உரிய சட்டபூர்வ அறிவிப்பு மற்றும் கட்டாய நடைமுறைகளைக் கேரள போலீசார் முறையாகப் பின்பற்றவில்லை என்று பிரேம்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், போலீசாரின் கைது நடவடிக்கையில் நடைமுறைப் பிழைகள் இருப்பதாகக் கூறி அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது. எனினும், தகுந்த சட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி அவரை மீண்டும் கைது செய்யப் போவதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த மெகா மோசடி சர்ச்சை குறித்து பிஎல்எம் (BLM) நிர்வாகம் அதிகாரப்பூர்வ விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ நவீன் என்பவர் தவறான புரிதலின் காரணமாகவே இப்புகாரை அளித்துள்ளதாகவும், தற்போது அதனைத் திரும்பப் பெற விரும்புவதாகக் கூறி அவர் கேரளா உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முதலீட்டாளர்களின் முதிர்வுத் தொகை மற்றும் வட்டி அனைத்தும் உரிய காலத்தில் முறையாக வழங்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
