LATEST NEWS
விளையாட்டு வினையானது..! “நெஞ்சில் பாய்ந்த கத்தரிக்கோல்” நூலிழையில் உயிர் பிழைத்த 3 வயது சிறுமி – எக்ஸ்ரே பார்த்து மிரண்ட மருத்துவர்கள்.. அடுத்து நடந்த அதிசயம்..!!
குஜராத் மாநிலம் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில், 3 வயது சிறுமியின் நெஞ்சில் குத்தியிருந்த கத்தரிக்கோலை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அவசர உயிர் காத்துள்ளனர். கச்சில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர் தம்பதியின் மகளான இச்சிறுமி, கடந்த மாதம் தனது 5 வயது சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது.
விபத்தைத் தொடர்ந்து சிறுமிக்கு உள்ளூரில் முதலுதவி மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின்னர் காயத்தின் தீவிரத்தன்மை காரணமாக அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சைத் துறையின் நிபுணர்கள் அடங்கிய குழு, அவசர அறுவை சிகிச்சை மூலம் சிறுமியின் முக்கிய உறுப்புகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் கத்தரிக்கோலை பாதுகாப்பாக அகற்றியது.
அந்தக் கூர்மையான பொருள் இன்னும் ஒரு அங்குலம் தள்ளி அல்லது மேலே குத்தியிருந்தால் முக்கிய இரத்த நாளங்கள் அல்லது மூச்சுக்குழாய் பாதிக்கப்பட்டு கடுமையான உள் இரத்தப்போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளதால், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படத் தயாராகி வருகிறார்.
