CRIME
காவல்துறைக்கே அசிங்கம்..! முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை.. சிறப்பு எஸ்.ஐ அதிரடி கைது…!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணிக்குச் சென்று திரும்பிய திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் காவலருக்கு, சிறப்புச் சார்பு ஆய்வாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகர காவல் துறையிலிருந்து பெண் காவலர்கள் உள்ளிட்ட ஒரு குழுவினர் பெருந்துறையில் நடைபெற்ற முதலமைச்சரின் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். முதலமைச்சரின் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அனைவரும் மீண்டும் ஒரு வேன் மூலமாகத் திருநெல்வேலிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த பயணத்தின்போது, வேனில் உடன் வந்த திருநெல்வேலி மாநகர காவல் துறையைச் சேர்ந்த சிறப்புச் சார்பு ஆய்வாளர் குமார் என்பவர், அந்த பெண் காவலருக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் காவலர், திருநெல்வேலிக்குத் திரும்பியவுடன் இந்த அராஜகம் குறித்துத் தனது உயர் அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். பெண் காவலரின் இந்தத் துணிச்சலான புகாரைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரம் குறித்துத் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், சிறப்புச் சார்பு ஆய்வாளர் குமார் மீது பெண்களுக்கெதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒழுங்கீனமான செயலுக்காகச் சிறப்புச் சார்பு ஆய்வாளர் குமாரை உடனடியாகப் பணி இடைநீக்கம் (Sushpend) செய்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அதிரடி உத்தர பிறப்பித்துள்ளார். முதலமைச்சரின் பாதுகாப்புப் பணிக்குச் சென்று திரும்பிய இடத்திலேயே பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
