LATEST NEWS
“இப்படியும் ஒரு மருமகனா? கொரோனாவுக்கு பலியான மாமனாருக்கு ரூ.1.5 கோடியில் பிரம்மாண்ட கோவில்.. தமிழகத்தையே நெகிழ வைத்த பாசம்..!!
கொரோனா தொற்றால் உயிரிழந்த தனது மாமனாருக்கு, மருமகன் ஒருவர் ரூ.1.5 கோடி செலவில் பிரம்மாண்டமாகக் கோவில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் ஊராட்சியைச் சேர்ந்த பெரியநாயகம் என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவைத் தாங்க முடியாத அவரது மகள் அனிதாவின் கணவரான சாரதி பெரியநாயகம், தனது மாமனாரைக் குடும்பத்தின் வழிகாட்டியாகவும் குலதெய்வமாகவும் கருதி, அவரது நினைவாக இந்த நினைவுக் கோவிலை எழுப்பியுள்ளார்.
ஐயப்பன்தாங்கல் பகுதியில் பளிங்கு கற்கள் மற்றும் அழகிய தூண்களுடன் பாரம்பரிய வடிவில் கட்டப்பட்ட இந்தக் கோவிலின் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து, கும்பகோணத்தில் இருந்து ₹2 லட்சம் மதிப்பில் பிரத்யேகமாகச் செதுக்கப்பட்டு வரவழைக்கப்பட்ட பெரியநாயகத்தின் 6 அடி உயர முழு உருவச் சிலைக்குப் பால், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜைகளுடன் ஆகம விதிகளின்படி கோபுரக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா மிக விமரிசையாக நடைபெற்றது.
மாமனாருக்குக் கோவில் எழுப்பியதோடு நிறுத்தாமல், சாரதி பெரியநாயகம் தனது மாமனாரின் நினைவாக அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார். இதன் மூலம் பெரியநாயகத்தின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினங்களில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற சுமார் 2,000 பேருக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெற்ற பெற்றோருக்கு நிகராகத் தன்னை வழிநடத்திய மாமனாருக்கு மருமகன் காட்டியுள்ள இந்த நன்றி உணர்வு, இன்றைய தலைமுறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாக அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
