CRIME
“ஹாஸ்டல் நஷ்டத்துல ஓடுதுங்க…” வாடகைப் பணத்தை G-Pay கணக்கிற்கு மாற்றி இளம்பெண் செய்த பலே மோசடி.. கணக்கு பார்த்தபோது முதலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!
சென்னை ஆலந்தூர் பகுதியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளை நிர்வகித்து வந்த 28 வயது பெண், விடுதி வாடகைப் பணம் 15 லட்சம் ரூபாயைத் தனது சொந்த கூகுள் பே கணக்கிற்குத் திருப்பிவிட்டு மோசடி செய்த குற்றத்திற்காகப் பரங்கிமலை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலந்தூர் புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்த கீதா (42) என்பவர் இந்த இரண்டு விடுதிகளையும் நடத்தி வந்தார். கடந்த 2025 ஜூன் 1 முதல், அவரது மாமனாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், விடுதிகளைப் பராமரிக்கும் மற்றும் வாடகையை வசூலிக்கும் பொறுப்பை கிண்டி மடுவங்கரையைச் சேர்ந்த சுபதாரிணி (28) என்ற பெண்ணிடம் ஒப்படைத்திருந்தார்.
விடுதியை நிர்வகித்து வந்த சுபதாரிணி, விடுதிகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும், மேம்பாட்டுப் பணிகளுக்குக் கூடுதல் நிதி தேவைப்படுவதாகவும் உரிமையாளர் கீதாவிடம் நம்பும்படி கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய கீதா, தனது தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்று சுமார் 21 லட்சம் ரூபாயை விடுதியின் வளர்ச்சிக்காகச் செலவிட்டுள்ளார். அதன் பிறகு, கீதா விடுதியின் கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்து சரிபார்த்தபோதுதான் சுபதாரிணியின் பகீர் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விடுதி வாசிகள் கொடுத்த வாடகைப் பணம் சுமார் 15 லட்சம் ரூபாயை விடுதிக் கணக்கில் சேர்க்காமல், தனது சொந்த கூகுள் பே கணக்கிற்கு சுபதாரிணி முறைகேடாகப் பெற்று ஏமாற்றியதைக் கீதா கண்டுபிடித்தார்.
இதுகுறித்து கீதா நேரில் கேட்டபோது, பணத்தைத் திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்ட சுபதாரிணி, பின்னர் பல்வேறு காரணங்களைக் கூறி ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர் கீதா அளித்த புகாரின் பேரில், பரங்கிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து சுபதாரிணியைத் தீவிரமாக விசாரித்துக் கைது செய்தனர். மேலும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட அவரது மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுபதாரிணி தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
