LATEST NEWS
ஐயோ கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நடந்த பெருஞ்சோகம்.. நள்ளிரவில் பற்றிய பயங்கர தீ… மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன் பரிதாப பலி..!!
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள ஃபால்னா நகரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பட்டாசுப் பொறி மூலம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி பறிபோனது. ஸ்வர்ண மந்திர் அருகே நிகழ்ந்த இந்தத் துயரமான தீ விபத்தில், குடாலா-ஃபால்னா நகராட்சி 23வது வார்டு கவுன்சிலர் உஷா பூனியா (68) மற்றும் அவரது கணவர் பிரகாஷ் பூனியா (70) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், அவர்களைக் காப்பாற்ற முயன்ற பிரகாஷின் மூத்த சகோதரர் கௌதம் பூனியா (73) பலத்த தீக்காயமடைந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 10:30 மணியளவில் சாலையில் சிலபேர் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த போது, பட்டாசிலிருந்து பறந்த ஒரு பொறி கடையின் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது விழுந்தது. இதனால் உடனடியாக பட்டாசுகளில் தீப்பற்றி, அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது. தீ வேகமாகப் பரவியதால், உஷா பூனியா தப்புவதற்காகக் கடையின் அடித்தளத்திற்குச் சென்றார்; மனைவியைக் காப்பாற்றுவதற்காக அவரது கணவர் பிரகாசும் அங்கு இறங்கினார். ஆனால், அங்கே புகைமூட்டம் அதிகமாகியதால் இருவரும் மூச்சுத்திணறி மயக்கமடைந்தனர். அதிகாலை 5 மணி அளவில் நடைபெற்ற மீட்பு நடவடிக்கையின்போது இருவரின் உடல்களும் வெளியே எடுக்கப்பட்டன.
இந்த விபத்தில் பிரகாஷ் பூனியாவின் மூத்த சகோதரர் கௌதம் பூனியாவும் அவர்களைக் காப்பாற்ற முயன்றபோது பலத்த தீக்காயமடைந்தார். அவர் பாலி நகரில் உள்ள பாங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நிலைமை தீவிரமாக இருந்ததால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி ஜோத்பூருக்கு மாற்றப்பட்டார். இந்த பயங்கர தீ விபத்தில் அழகுப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ரேடியோ-பேட்டரி கடைகள் உள்ளிட்ட மூன்று கடைகளும் முழுமையாக எரிந்து சாம்பலாகின. சுமேர்பூர், பாலி, சாத்ரி மற்றும் ராணி ஆகிய பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் இரவில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தன.
