CRIME
“கொஞ்சம் கூட இரக்கமில்லையா..?” காரை நிறுத்தச் சொன்ன காவலர்… அடுத்த நொடி பானட்டில் 200 மீட்டர் இழுத்துச் சென்ற ஓட்டுநர்..! வைரலாகும் திகில் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில், கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான ‘நாகாபந்தி’ வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த ஒரு காரை நிறுத்துமாறு காவலர் திலீப் போய் சிக்னல் காட்டியுள்ளார். ஆனால், அந்த காரை ஓட்டிவந்த நபர் வாகனத்தை நிறுத்தாமல் காவலர் திலீப் மீது மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு காரின் முன்பகுதியான பானட் மீது விழுந்தார்.
காவலர் பானட் மீது விழுந்த பிறகும் சிறிதும் இரக்கமின்றி காரை நிறுத்தாத அந்த ஓட்டுநர், வாகனத்தை மேலும் அதிவேகமாக இயக்கிச் சென்றார். சுமார் 200 மீட்டர் தூரம் வரை காவலரை பானட்டிலேயே ஆபத்தான முறையில் இழுத்துச் சென்ற அவர், அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த காவலர் திலீப் போய்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய காரில் போலி பதிவு எண் பயன்படுத்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இதனால் காரின் உண்மையான உரிமையாளரைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளபோதிலும், அப்பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
