LATEST NEWS
செம தீர்ப்பு..! கிழிந்த ரெயின் கோட்டை விற்ற பிரபல பிராண்ட் கடை… ரூ.31,000 அபராதம் விதித்த நுகர்வோர் ஆணையம்..!!
சண்டிகர் மாநிலத்தில் உள்ள எலாண்டே மாலில் ‘கொலம்பியா கேர்’ என்ற கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கடையில் மழைக்காலத்திற்குப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ரெயின் கோட்டுகள் மற்றும் ஜாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 2025 டிசம்பர் 25 அன்று மூன்று கொலம்பியா ஜாக்கெட்டுகளை ரூபாய் 26,997 செலுத்தி வாடிக்கையாளர் ஒருவர் வாங்கியுள்ளார்.
இதையடுத்து வீட்டிற்குச் சென்று ஜாக்கெட்டுகளை அணிந்து பார்த்தபோது, அதில் ரூபாய் 10,999 மதிப்புள்ள ஒரு ஜாக்கெட் மட்டும் கிழிந்து சேதமடைந்த நிலையில் இருந்தது வாடிக்கையாளருக்குத் தெரியவந்துள்ளது. இது குறித்து ஜனவரி 10 அன்று கடை நிர்வாகத்திற்கு இ-மெயில் மூலம் அவர் புகார் அளித்தார். தொடர்ந்து ஜனவரி 11 அன்று கூடுதல் தகவல்களைக் கடை நிர்வாகம் கோரியதையடுத்து, அதற்கான விவரங்களையும் வாடிக்கையாளர் அனுப்பினார்.
பின்னர் ஜனவரி 12 அன்று, இந்த விவகாரம் மறுஆய்வுக்காக மேல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டதாக கடை நிர்வாகம் தெரிவித்தபோதிலும், ஜனவரி 14 அன்று அந்த புகாரை நிராகரிப்பதாக கடை நிர்வாகம் தெரிவித்தது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளர், ஜனவரி 15 அன்று நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு குறைதீர்ப்பு ஆணைய தலைவர் அம்ரிந்தர் சிங் சித்து மற்றும் உறுப்பினர் பிரிஜ் மோகன் ஷாமா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த குறைதீர்ப்பு ஆணையம், வாங்குபவரே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கடை நிர்வாகத்தின் வாதத்திற்கு மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்த கிழிசலானது ஜாக்கெட்டின் கைக்கு கீழே, எளிதில் கண்ணுக்கு புலப்படாத ஒரு இடத்தில் அமைந்துள்ளதாக கடை நிர்வாகம் கூறிய வாதத்தையும் மறுத்தது. வாடிக்கையாளரின் உண்மையான குறையை நிவர்த்தி செய்ய தவறியதன் மூலம், சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை மூலம், வாடிக்கையாளருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறை தீர்ப்பு ஆணையம் குறிப்பிட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடாக ரூபாய் 20,000 வழங்க வேண்டும் என்றும், வாடிக்கையாளர் வாங்கிய ரூபாய் . 10,999 மதிப்புள்ள ஜாக்கெட்டின் விலையை கடை நிர்வாகம் திருப்பி தரும்படியும் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டது. இதன்மூலம் மொத்தம் ரூபாய் 30,999 மதிப்பிலான அபராதத்தொகையை வாடிக்கையாளருக்கு செலுத்தும்படி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
