CRIME
“என் பேரன் தந்தையை இழந்துவிட்டான்” கண்ணீர் விட்ட தந்தை.. ₹1 கோடி கொடுத்து மாப்பிள்ளையைக் கொன்ற பிரணய் வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!
கடந்த 2018-ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மிரியாலகுடா பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான பிரணய் பெருமல்லா, தனது சிறுவயதுத் தோழியான அம்ருதா வர்ஷினியைக் காதலித்து வந்தார். பிரணய் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் இவர்களின் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி பிரணய் மற்றும் அம்ருதா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு 2018 செப்டம்பர் 14-ஆம் தேதி, ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த அம்ருதாவுக்கு முதுகுவலி ஏற்பட்டதால், பிரணய் தனது தாயாருடன் சேர்ந்து அவரை மிரியாலகுடாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனை பரிசோதனை முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது, பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் பிரணய்யை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார். கர்ப்பிணி மனைவியின் கண்முன்னே நிகழ்ந்த இந்தப் படுகொலையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்தப் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், பிரணய்யைக் கொலை செய்வதற்காக அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் ₹1 கோடி கூலிப்படைக்குப் பணம் கொடுத்ததைக் கண்டறிந்து, அவரை முக்கியக் குற்றவாளியாகச் சேர்த்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு விடுதி அறையில் மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார்.
கொலை நடந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 மார்ச் 10-ஆம் தேதி நல்கொண்டா சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. பிரணய்யை நேரடியாக வெட்டிக் கொன்ற சுபாஷ் குமார் சர்மாவுக்குத் தூக்கு தண்டனையும், இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட்ட மற்ற ஆறு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பிற்குப் பிறகு கண்ணீர் விட்டுக் கதறிய பிரணய்யின் தந்தை பெருமல்லா பாலசுவாமி, “இந்தப் படுகொலையால் அம்ருதா தனது கணவரையும், நாங்கள் எங்கள் மகனையும், என் பேரன் தனது தந்தையையும் இழந்துவிட்டோம்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
