LATEST NEWS
நள்ளிரவில் வெடித்த சிலிண்டர்… கண்முன்னே உடல் கருகி உயிரிழந்த தாய் மற்றும் 2 மகள்கள்.. கதறித் துடித்த கணவர், மகன்கள்.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள பாப்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கைடி கிராமத்தில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், தாயும் அவரது இரண்டு மகள்களும் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சாஜித் (35) என்பவரது வீட்டில் இரவு சுமார் 12 மணியளவில் சமையலறையிலிருந்து தீ வேகமாகப் பரவி அருகிலிருந்த அறையையும் சூழ்ந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சாஜித்தின் மனைவி ஷாஹிதா (32) மற்றும் மகள்கள் அடன் (13), மஹிரா (11) ஆகியோரால் அங்கிருந்து வெளியேற முடியாமல் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த சாஜித்தும் அவரது இரண்டு மகன்களும் கூச்சல் சத்தம் கேட்டு விழித்து, தப்பித்து உயிர் பிழைத்தனர். தீயை அணைத்து குடும்பத்தினரைக் காப்பாற்ற அவர்கள் ஓடிச் சென்றபோதிலும், தீப்பிழம்புகள் மிகக் கடுமையாக இருந்ததால் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். கிராம மக்களும் தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மின் கசிவுக்குப் பிறகு சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்தக் கோர விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மூன்று உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக்குப் பிறகே விபத்துக்கான உண்மையான காரணம் முழுமையாகத் தெரியவரும் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
