LATEST NEWS
“வெற்றி மாடல் புத்தகத்தில் இந்த அவமானம் எங்கே இடம்பெறும்..?” காவிரி விவகாரத்தில் முதலமைச்சரை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி.. பரபரக்கும் அரசியல் களம்..!!
காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசின் இரண்டு இடையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ்தளப்பதிவில், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மனுக்களை ஒரே வார்த்தையில் “தள்ளுபடி” செய்துள்ளதாகவும், இப்படி ஒரு தீர்ப்பு வந்திருப்பதே இன்றைய முதலமைச்சருக்குத் தெரியாது என்பதால் தீர்ப்பின் நகல்களை இணைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த அவமானம் “வெற்றி மாடல்” புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் இடம்பெறப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமலும், கூட்டணிக் கட்சியான காங்கிரஸுடன் பேசாமலும், சட்டப் போராட்டத்தை முறையாக நடத்தாமலும் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு எதிராகப் பேசி வரும் கர்நாடக முதலமைச்சரை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல், டெல்லியில் அவரோடு இணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதாகவும், சோனியா காந்தியின் குடும்பக் கதையைக் கேட்டுச் சிரிக்க இருக்கும் நேரம் தமிழக விவசாயிகளைப் பற்றிப் பேச முதலமைச்சர் விஜய்க்கு இல்லையா என்றும் அவர் காட்டமாக வினவியுள்ளார்.
ஏற்கனவே ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க முடியாமல் குறுவை சாகுபடி வீணாகிப் போன நிலையில், தற்போதும் கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததாலும், தவெக கூட்டணி அரசின் செயலற்ற தன்மையாலும் சம்பா சாகுபடியும் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். எப்போது பார்த்தாலும் தனக்கு எதிராகச் சதி நடப்பதாகக் கூறி நீலிக்கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் விஜய், தனது சுயநலத்திற்காகத் தமிழகத்தின் உரிமைகளைத் தாரைவார்க்கத்தான் ஆட்சிக்கு வந்தாரா என்றும் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
இறுதியாக, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் தனது தலைமையிலான அதிமுக அரசுகள் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துத் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். தமிழகத்தின் ஜீவாதார உரிமையோடும் விவசாயிகளின் வாழ்க்கையோடும் விளையாட வேண்டாம் என எச்சரித்துள்ள எடப்பாடி பழனிசாமி, “நீர் இன்றி நெல் இல்லை; நெல் இன்றி குடி இல்லை; குடி இல்லையேல் கோன் எதற்கு?” என்று மக்கள் கேட்கும் நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள் எனத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
