LATEST NEWS
“தவெக MLA-வை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை!” ஏன் தெரியுமா..? கார்த்தி சிதம்பரம் வெளியிட்ட அதிரடி கருத்தால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்த புகாரில், ஆளுங்கட்சியான தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ.வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இது குறித்து மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.
எல்லா விஷயத்திற்கும் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் தனக்கு உடன்பாடில்லை எனத் திட்டவட்டமாகக் கூறிய அவர், குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கின் சாட்சியங்களைக் கலைப்பார் என்று காவல்துறை கருதினால் மட்டுமே கைது செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட நபரால் பிறரின் உயிருக்கோ அல்லது உடைமைக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை என்றால் அவரைக் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
அதேநேரத்தில், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய கார்த்தி சிதம்பரம், அவரைக் கைது செய்வதற்குப் பதிலாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே போதுமானது எனவும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
