LATEST NEWS
“இது என்ன புது கூத்தா இருக்கு..” இன்ஸ்டாகிராமில் காதல்… ரூ.100 பத்திரத்தில் கையெழுத்து..! லிவ்-இன் உறவுக்குப் போட்ட வித்தியாசமான அக்ரிமெண்ட்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத்தில் லிவ்-இன் உறவு தொடர்பான வித்தியாசமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமரோகாவைச் சேர்ந்த 23 வயதான ரோஷினி ராகவ் என்ற திருமணமான பெண்ணுக்கு, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் முராதாபாத்தைச் சேர்ந்த அமித் குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. தனது முதல் கணவர் குடிப்பழக்கம் கொண்டவராகவும், தினமும் அடித்துத் துன்புறுத்துபவராகவும் இருப்பதாகக் கூறும் ரோஷினி, கணவரைப் பிரிந்து திருமணமான காதலனான அமித் குமாருடன் வாழத் தொடங்கியுள்ளார். இருவரும் தங்கள் உறவை உறுதிப்படுத்தும் விதமாக ரூ. 100 முத்திரைத் தாளில் கையொப்பமிட்டு நோட்டரி செய்து ஒப்பந்தம் போட்டுள்ளனர்; இதில் அமித் குமாரின் முதல் மனைவியும் அவரது இரண்டு குழந்தைகளும் அவருடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரோஷினி அமித்தின் வீட்டிற்குச் சென்ற நிலையில், அவரைத் தன்னுடன் வைத்துக் கொள்ள அமித்தின் முதல் மனைவி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதே வீட்டில் முதல் மனைவியிடமிருந்து ரோஷினி தனித்து வசிப்பார் என்றும், முதல் மனைவியின் குழந்தைகளிடம் எந்தப் பாகுபாடும் காட்ட மாட்டேன் என்றும் ஒப்பந்தத்தில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் இருவரும் சுயவிருப்பத்துடன் லிவ்-இன் உறவில் வாழ்வது, எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு இரண்டாம் தரப்பினரின் சொத்தில் முழு உரிமை மற்றும் பராமரிப்பு, கல்வி, மருத்துவம், திருமணச் செலவுகளை இரண்டாம் தரப்பினர் ஏற்பது, ஆதார் மற்றும் பான் கார்டு போன்ற ஆவணங்களில் தந்தையாக இரண்டாம் தரப்பினரின் பெயரைப் பதிவது ஆகிய விதிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், முதல் தரப்பினர் உறவில் ஒழுங்காக நடந்து கொள்வதும், இரண்டாம் தரப்பினர் முதல் தரப்பினரின் செலவுகளை ஏற்று மன அல்லது உடல் ரீதியான துன்பம் தராமல் வசதிகளைக் கவனித்துக் கொள்வதும் நிபந்தனைகளாக உள்ளன. அத்துடன் முதல் தரப்பினர் அமித்தின் முன்னாள் மனைவியின் குழந்தைகளைத் தன் சொந்தக் குழந்தைகளைப் போல் பராமரிப்பதும், இரு தரப்பினரும் ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்து ஒருவருக்கொருவர் புகார் அளிக்கும் சூழலை உருவாக்காமல் இருப்பதும், இந்த உடன்படிக்கையில் மூன்றாம் நபர்கள் அல்லது வெளியாரின் தலையீட்டிற்கு இடமில்லை என்பதும் உள்ளிட்ட மொத்தம் 9 நிபந்தனைகள் அந்த ஒப்பந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
