CRIME
“நான் அவனையே கல்யாணம் பண்ணிப்பேன்..!” சகோதரியின் ஒற்றை வார்த்தையால் ஆத்திரமடைந்த சகோதரன் செய்த பயங்கரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரபிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டத்தின் லக்னௌதி கிராமத்தைச் சேர்ந்த கோமல் சிங் என்ற இளம்பெண், சமூக ஊடகங்கள் மூலம் முசாபர்நகரைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் தீவிர காதலில் இருந்துள்ளார். பஞ்சாயத்து உதவியாளராகப் பணிபுரிந்து வந்த அவர், அண்மையில் தனது காதலனைத் தனது கிராமத்தில் உள்ள ஒரு கோயிலின் அருகே சந்தித்துப் பேசுவதற்காக வரவழைத்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கோமலின் சகோதரரான ஆஷிஷ் சிங் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது சகோதரியை உடனடியாக வீட்டிற்கு அழைத்து வந்து விசாரித்துள்ளார்.
அந்த விசாரணையின் போது, தான் அந்த வாலிபரை இணையதளம் வழியாகப் பல ஆண்டுகளாக நன்கறிவதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கோமல் தீர்க்கமாகக் கூறியுள்ளார். இதைக் கேட்ட ஆஷிஷ் பகல் நேரத்தில் அமைதியாக இருப்பது போல் நடித்தாலும், அன்றிரவே தனக்குக் கிடைத்த சரியான வாய்ப்பைப் பயன்படுத்தி, கோமலின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கௌரவக் கொலை எனச் சந்தேகிக்கப்படும் இந்தச் சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு, அவரே நேராகக் காவல் நிலையத்திற்குச் சென்று போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.
