CRIME
“15 வருஷத்துல 4-வது முறை…” ஒரே குடும்பத்தை வேட்டையாடும் நாகம்.. தூக்கத்திலேயே 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் நகரின் மோகன் காலனி பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தொடர்ந்து பாம்புகள் தாக்கி வரும் கோரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை அரங்கேறியுள்ளது. மோகன் காலனியைச் சேர்ந்த சஞ்சய் கான் என்பவரின் 11 வயது மகன் ஆயுஷ் கான், கடந்த இரவு தனது வீட்டில் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த ஒரு விஷப்பாம்பு அந்தச் சிறுவனைக் கடித்துள்ளது. காலையில் சிறுவனுக்குப் பாம்பு கடித்ததை அறிந்த குடும்பத்தினர், அவனைப் பிழைக்க வைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
கடந்த 15 ஆண்டுகளில் இந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பாம்பு கடிப்பது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்பும் இதேபோலப் பாம்பு கடித்ததில் இக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் ஏற்கனவே தனது உயிரை இழந்துள்ளார். இந்நிலையில், தற்போது 11 வயது சிறுவனும் படுக்கையிலேயே பாம்பு கடித்துப் பலியாகியிருப்பது அந்தக் குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
