LATEST NEWS
“அண்ணன் சீர் செய்யவே முடியாது… ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடன்…!” சட்டசபையில் திமுக-தவெக இடையே வெடித்த காரசார விவாதம்..!!!
தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த நிலையில், அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது பேசிய முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான ரகுபதி, “எங்கள் தலைவர் எங்கே இருக்கிறார் எனக் கேட்டவர்களுக்குச் சொல்கிறேன்; மகளிர் உரிமைத் தொகை வாங்கும் ஒவ்வொரு பெண்களின் உள்ளத்திலும், விடியல் பயணத் திட்டத்திலும் எங்கள் தலைவர் இருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் அரைகுறையாகத்தான் இருக்கின்றன. ‘அண்ணனின் சீர்’ திட்டத்தைச் செயல்படுத்த ரூ.2,000 கோடி தேவைப்படும் நிலையில், நீங்கள் வெறும் ரூ.812 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளீர்கள்” எனக் குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், ஸ்டாலின் எங்கெல்லாம் இருப்பார் என்று திமுகவினர் கூறியதைக் குறிப்பிட்டு, “தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 1.28 லட்சம் ரூபாய் கடனை விட்டுச் சென்றுள்ளீர்கள்” எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பதிலளித்த திமுக எம்எல்ஏ கே.என்.நேரு, “நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் 60 நாட்களில் ரூ.21,000 கோடி கடன் பெற்றுள்ளீர்கள். அரசு முன்னேற்றத்திற்காகத் தான் கடன் வாங்குகிறது. எவ்வளவு கடன் வாங்கியுள்ளோம் என்பதைப் பார்க்கக் கூடாது; எவ்வளவு வளர்ச்சித் திட்டங்களைச் செய்திருக்கிறோம் என்பதைத் தான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
