CRIME
“ரூ.30,000 தர்றோம்…” ஏழைப் பெண்களைக் குறிவைத்து ரகசிய விடுதிகளில் நடந்த மருத்துவ மாஃபியா.. போலி ஆதார் கார்டுகளுடன் சிக்கிய பிரம்மாண்ட கும்பல்.. உறைய வைக்கும் பின்னணி..!!
ஐதராபாத்தை மையமாகக் கொண்டு 9 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 350 ஏழைப் பெண்களை ஏமாற்றி, சட்டவிரோதமாகக் கருமுட்டைகளைச் சேகரித்து வந்த பிரம்மாண்ட மாஃபியா கும்பலை போலீஸார் அதிரடியாக முறியடித்துள்ளனர். இந்த மோசடி கும்பலின் தலைவனான அமித் சர்மா என்பவர், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், டெல்லி, அசாம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய 9 மாநிலங்களில் ஏஜென்ட்டுகளை நியமித்து, வறுமையில் வாடும் இளம் பெண்களைக் குறிவைத்துள்ளார். அவர்களுக்கு ரூ.30,000 கமிஷன் மற்றும் உணவு, தங்குமிடம், பயணச் செலவுகளுக்காக ரூ.40,000 தருவதாகக் கூறி ஐதராபாத்திற்கு அழைத்து வந்துள்ளனர். பிரகாஷ் நகர், பேகம்பேட், வெங்கடேஸ்வரா காலனி மற்றும் சரூர்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு, ஐவிஎஃப் மையங்களின் தேவைக்காக இவர்களிடமிருந்து சட்டவிரோதமாகக் கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுகாதாரத் துறையின் எந்தவொரு அனுமதியுமின்றி போலி ஆதார் கார்டுகள் மற்றும் போலி ஆத்தரைசேஷன் கடிதங்களைப் பயன்படுத்தி இந்த அராஜகம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து சேகரிக்கப்படும் கருமுட்டைகளை, ஹப்சிகுடா, பஞ்சாரா ஹில்ஸ் மற்றும் எல்.பி.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்து பிரபல ஐவிஎஃப் மையங்களுக்கு இரட்டிப்பு விலைக்கு இந்த கும்பல் விற்று வந்ததாகப் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பேகம்பேட் மற்றும் சரூர்நகர் காவல் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மீட்கப்பட்ட 43 பெண்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டவிரோத மருத்துவ மாஃபியாவில் ஐவிஎஃப் மையங்களின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு உள்ள தொடர்பு குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
