CRIME
அடக்கடவுளே.. மது போதையில் ஸ்டீயரிங் பிடித்த இளைஞர்கள்.. இசை வகுப்பு முடிந்து வந்த தாய், குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில், இசை வகுப்பு முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் மீது, மது போதையில் வாலிபர்கள் ஓட்டி வந்த கார் மோதி கொடூர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த இளைஞர்கள் மது அருந்தியிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்த சொகுசு கார் சாலையோரமாக நடந்து சென்றவர்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் 3 வயது மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்களும், அவர்களது தாயும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
இந்த பயங்கர விபத்தில் படுகாயமடைந்த தாய் மற்றும் குழந்தைகள் மூவருக்கும் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்ற காரையும், அதில் இருந்த வாலிபர்களையும் அந்தப் பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வாலிபர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
