Uncategorized
“என் மகளை யார் திருப்பித் தருவா..? ராஜினாமா மட்டும் போதாது..!” மத்திய அரசை அலறவிட்ட தாயின் அதிரடி கோரிக்கை…!!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் ஏற்பட்ட நாடு தழுவிய கொந்தளிப்பைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும், இந்த ராஜினாமா மட்டும் போதாது என்றும், வினாத்தாள் கசிவுக்குக் காரணமான குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் நீட் தேர்வு அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிராவின் நாக்பூரில் படித்து வந்த 18 வயது மாணவி அகான்ஷா சதுர்வேதி, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலால் கடந்த மே 20 அன்று தற்கொலை செய்துகொண்டார். அமைச்சரின் ராஜினாமா குறித்துப் பேசிய அகான்ஷாவின் தாயார் நீலம் சதுர்வேதி, ஒரு அமைச்சர் ராஜினாமா செய்வதால் மட்டுமே அவரது பொறுப்பு முடிந்துவிடாது என்றும், மாணவர்களின் போராட்டத்திற்குத் தங்கள் குடும்பம் ஆதரவு தெரிவிப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அகான்ஷாவின் குடும்பம், மகளின் மருத்துவக் கனவை நனவாக்குவதற்காக நாக்பூருக்குக் குடிபெயர்ந்தது. தந்தை ஒரு சிறிய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டே, மகளின் பயிற்சி வகுப்புக் கட்டணத்திற்காக நாக்பூரில் சமையல் வேலையும் செய்து வந்தார். மகளின் எதிர்பாராத மறைவுக்குப் பிறகு, அவரது தந்தைக்கு இருமுறை மாரடைப்பு ஏற்பட்டுத் தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். என் மகள் உயிருடன் இருந்திருந்தால் குடும்பத்தை அவளே காப்பாற்றியிருப்பாள். இனி எங்களை யார் கவனிப்பார்? என அவளது தாயார் கண்ணீர் வடித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு குறித்த அழுத்தத்தால் நாடு முழுவதும் இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வில் 650-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறுவேன் என்ற நம்பிக்கையில் இருந்த அகான்ஷா, தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அவர் எழுதி வைத்த தற்கொலைக் குறிப்பில், “அம்மா, அப்பா… உங்கள் மகள் நன்றாகப் படித்து டாக்டர் ஆவாள் என்று நம்பினீர்கள். ஆனால் மீண்டும் நீட் தேர்வு எழுத எனக்குத் தைரியம் இல்லை. முதல் முறையில் நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருப்பேன், ஆனால் மறுத்தேர்வில் மீண்டும் என்னால் சிறப்பாகச் செய்ய முடியுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, அப்பா… நான் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டேன்” என்று உருக்கமாக எழுதியிருந்தது அனைவரையும் உலுக்கியுள்ளது.
