LATEST NEWS
லக்கேஜ் பாக்ஸிலிருந்து எகிறிய தீப்பொறி..! விமானப் பயணத்தின் போது பவர் பேங்க் கொண்டு செல்வதில் இவ்வளவு ஆபத்தா…? பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய முறைகள்… என்னனு தெரியுமா..?!
சீனாவின் ‘சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லான்சோவிலிருந்து குய்யாங் நகருக்குச் சென்ற அந்த விமானம் தரையிறங்கிய உடனே, பயணிகளின் தலைக்கு மேல் உள்ள லக்கேஜ் கம்பார்ட்மென்ட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவர் பேங்க் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. பயணிகள் தங்களின் உடமைகளை எடுக்க கம்பார்ட்மென்ட்டைத் திறந்தபோது அடர்ந்த புகையும் தீப்பொறியும் வெளிவந்தன. எனினும், விமான ஊழியர்கள் மற்றும் பயணிகளின் சுதாரிப்பான நடவடிக்கையால் தீ உடனடியாக அணைக்கப்பட்டு, பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
விமானத்தில் பவர் பேங்க் திடீரென வெடித்துத் தீப்பிடிப்பதற்கு ‘தெர்மல் ரன்அவே’ என்ற வேதியியல் நிகழ்வே முக்கியக் காரணம் என்று நிபுணர்கள் விளக்குகின்றனர். பவர் பேங்க்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளில் ஏதேனும் ஷார்ட் சர்க்யூட், பேட்டரி சேதம் அல்லது அதிக வெப்பம் ஏற்படும் போது, அதனுள் இருக்கும் வேதிப்பொருட்கள் மிக விரைவாக வெப்பமடைந்து கட்டுப்பாட்டை இழந்து வெடிக்கவோ அல்லது தீப்பற்றவோ செய்கின்றன.
இதுபோன்ற ஆபத்துகளைத் தவிர்க்கவே விமான நிறுவனங்கள் பவர் பேங்க் தொடர்பாகக் கடுமையான விதியை அமல்படுத்தியுள்ளன. பவர் பேங்க்கள் மற்றும் கூடுதல் லித்தியம் பேட்டரிகளை எக்காரணம் கொண்டும் ‘செக்-இன் பேகேஜில்’ வைக்கக் கூடாது; அவசர காலத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வசதியாக அவற்றை எப்போதும் கையோடு எடுத்துச் செல்லும் ‘கேபின் பேகிலேயே’ வைக்க வேண்டும். மேலும், பழைய, பழுதடைந்த அல்லது உப்பிய நிலையில் உள்ள பேட்டரிகளை விமானத்திற்குள் கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
