LATEST NEWS
டமாஸ்கஸில் கோரத் தாண்டவம்..! பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தங்கியிருந்த பகுதியில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
சிரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ‘ஃபோர் சீசன்ஸ்’ ஹோட்டலில் தங்கியிருந்தார். அவர் இன்று காலை சிரிய அதிபர் அகமது அல் ஷாஹ்ராவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹோட்டலை விட்டுப் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே, அந்த ஹோட்டலுக்கு மிக அருகில் இந்த இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
சுற்றுலாத் துறை மற்றும் தேசிய அருங்காட்சியகக் கட்டடங்களுக்கு இடையே உள்ள மிகவும் பரபரப்பான ஒரு பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரிலும், அதற்குச் சற்று தொலைவில் இருந்த குப்பைத் தொட்டியிலும் வைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த இரட்டை குண்டுவெடிப்பில் 4 காவல்துறையினர் உட்பட மொத்தம் 18 பேர் காயமடைந்துள்ளதாக சிரிய உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் காரணமாக அதிபர் மேக்ரான் தனது இன்றைய திட்டங்கள் எதையும் ரத்து செய்யப் போவதில்லை என்று பிரான்ஸ் அதிபர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு சிரியாவில் பஷர் அல் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, கிளர்ச்சிக் குழுத் தலைவர் ஷாஹ்ரா பதவியேற்ற பிறகு, சிரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் முதல் ஐரோப்பியத் தலைவர் மேக்ரான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டமாஸ்கஸ் நீதிமன்ற வளாகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது நடந்துள்ள இந்த இரட்டை குண்டுவெடிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
