LATEST NEWS
யார் இந்த ‘ஈகிள் மேன்’..? இவர் கடற்கரைக்கு வந்தால் வானமே ‘பிளாக்’ ஆகிடுது..! என்ன நடக்குது அங்கே..?!
கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு தினமும் நடந்து வருகிறது. ‘அஜீஸ்கா’ என்ற முதியவர், தினமும் மதியம் 2 மணியளவில் தனது சைக்கிளில் கோழிக்கோடு கடற்கரைக்கு வருகிறார். அவர் வந்தவுடன், வானத்தில் நூற்றுக்கணக்கான கழுகுகளும் பருந்துகளும் வட்டமடித்துக் கூடத் தொடங்குகின்றன. பொதுவாக மனிதர்களைக் கண்டு அச்சப்படும் அல்லது ஆக்ரோஷமாகக் கருதப்படும் இந்த பறவைகள், அஜீஸ்காவைத் தேடி கூட்டமாக வருவது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இதன் காரணமாகவே இவர் இப்பகுதியில் ‘காலிகட்டின் ஈகிள் மேன்’ என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
அஜீஸ்கா தினமும் தனது சைக்கிளில் ஒரு பெரிய பையில் கோழி இறைச்சித் துண்டுகளைக் கொண்டு வருகிறார். கடற்கரைக்கு வந்ததும் அவர் ஒரு குறிப்பிட்ட தொனியில் விசில் அடிக்கிறார். கேரளாவில் இந்த ஒலியானது ‘கருணை மற்றும் அன்பின்’ அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்த விசிலைக் கேட்ட மாத்திரத்திலேயே, சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கழுகுகள் அவரிடம் சரணடைகின்றன. அவர் இறைச்சித் துண்டுகளை வீசும்போது, பறவைகள் அவரைச் சூழ்ந்துகொண்டு உணவை வாங்கி உண்கின்றன. சில நேரங்களில் கழுகுகளின் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால், உணவளிக்கும் அஜீஸ்கா பறவைகளுக்கு நடுவே மறைந்துவிடும் அளவுக்கு அந்த இடமே கழுகுகளின் ராஜ்யமாக மாறிவிடுகிறது.
https://www.instagram.com/reel/DWtDhVTkyeS/?utm_source=ig_web_button_share_sheet
பறவைகளைத் தவிர அப்பகுதியில் உள்ள தெரு விலங்குகளுக்கும் இவர் உணவளித்து வருகிறார். இவரைப் பற்றிய வீடியோ அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பலரையும் கவர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான கழுகுகள் அவரைச் சூழ்ந்திருந்தாலும், அவருக்கு எந்த ஆபத்தும் நேராததைக் கண்டு நெட்டிசன்கள் வியந்துபோயுள்ளனர். ‘அஜீஸ்காவிற்கு இந்த கழுகுகளே மிகப்பெரிய விஐபி பாதுகாப்பை வழங்குகின்றன’ என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் பாராட்டி வருகின்றனர். எந்தவித எதிர்பார்ப்புமின்றி விலங்குகள் மற்றும் பறவைகள் மீது அவர் காட்டும் இந்த 30 ஆண்டு காலப் பேரன்பு பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
