LATEST NEWS
ஆளே இல்லை.. ஆனா 25 பேருக்கு பிரசன்ட்..! கேமரா முன் வசமாக சிக்கிய சத்துணவு அதிகாரி… திருப்பத்தூர் சம்பவம் உணர்த்தும் பின்னணி என்ன..?!
திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் கடுமையான முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த மையத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளே நேரில் வந்திருந்த சூழலில், வருகைப்பதிவேட்டில் மொத்தம் 25 குழந்தைகள் வந்திருப்பதாகப் போலிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், போதிய இடவசதி இல்லாத அந்த மையத்தின் சமையல் செய்யும் இடத்திலேயே குழந்தைகளையும் அமர வைத்திருந்த அவலமும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் ஒருவர், அங்கிருந்த போலி வருகைப்பதிவேட்டை ஆதாரங்களுடன் தட்டிக்கேட்டு கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த பெண் அதிகாரி, செய்தியாளருக்குப் பதில் சொல்ல மறுத்து, தான் மாவட்ட ஆட்சியரிடமே பேசிவிட்டதாகக் கூறி அதிகாரத் தோரணையில் அலட்சியமாகப் பேசியுள்ளார். மேலும், தன் மீதான தவறை மறைப்பதற்காக, செய்தியாளர் தங்களை மிரட்டிப் பணம் பறிக்க வந்ததாகக் கேமரா முன்பே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், காவல்துறை மூலம் மிரட்டல்களையும் விடுத்துள்ளார்.
செய்தியாளரை அதிகாரி மிரட்டிய போதிலும், அவரிடம் இருந்த வருகைப்பதிவேட்டின் நகல் ஆதாரங்கள் மூலம் அங்கன்வாடி மையத்தின் முறைகேடுகள் அப்பட்டமாக அம்பலப்படுத்தப்பட்டன. இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வைரலாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட இந்த அங்கன்வாடி மையத்தில் மாவட்ட நிர்வாகமும், சமூக நலத்துறையும் உடனடியாக ஆய்வு நடத்தி, போலி அட்டண்டன்ஸ் போட்டு முறைகேட்டில் ஈடுபட்ட அந்தப் பெண் அதிகாரி மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
