LATEST NEWS
“எம்ஜிஆர் அன்பு + ஜெயலலிதா வீரம் = விஜய்.. இனி நிரந்தர முதலமைச்சர் இவர் தான்”.. கரூரை அதிரவைத்த முன்னாள் அதிமுக அமைச்சர்..!!
திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், வழிநெடுகிலும் திரண்டிருந்த தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டு கரூர் வந்தடைந்தார். அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பாகத் தொகுத்து வழங்க, பால்வளத்துறை அமைச்சர் விஜயலெட்சுமி வரவேற்புரையாற்றினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் முதலமைச்சருக்குத் திருவள்ளுவர் சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது; குறிப்பாக, சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முதலமைச்சர் விஜய்க்கு வெள்ளியால் ஆன வாளைப் பரிசாக வழங்கி கௌரவித்தார்.
தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்ஜிஆரின் பற்றையும் ஜெயலலிதாவின் துணிச்சலையும் ஒருங்கே கொண்டவராக அவர் விளங்குகிறார் எனப் பாராட்டினார். மேலும், தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக விஜய் மட்டுமே நீடிப்பார் என்றும், இனி தமிழகத்தின் எதிர்காலம் தளபதியின் கைகளில் தான் பத்திரமாக உள்ளது என்றும் அவர் தனது பேச்சில் உறுதியாகக் குறிப்பிட்டார். கடந்த கால தீயசக்தி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருந்ததாகவும், அவற்றை தூள் தூளாக்கவே புரட்சி தளபதி விஜய் வந்துள்ளார் என்றும் அவர் பேசினார். தொடர்ந்து முதலமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்த அவர், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை இனாம் அடிப்படையில் பெற்று குடியிருப்பவர்களை, அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
